மக்கள் போராட்டத்தில் பதவி இழந்த தென் கொரிய அதிபர்! காரணம்?

மக்கள் போராட்டத்தில் பதவி இழந்த தென் கொரிய அதிபர்! காரணம்

தென்கொரிய அதிபர் யூன் சுக் யியோல் அந்நாட்டில் வெடித்த  மக்கள் போராட்டத்தினால்   பதவி நீக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன

தென் கொரியாவின் அதிபராக இருந்த யூன் சுக் யியோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி இரவு திடீரென நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தில் தலையீடு செய்து, வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும்  , நாட்டுக்கு எதிராக செயற்படுவதாகவும்  குற்றம் சாட்டி அவர் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இருந்தார்.


ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிராக,  நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் யூன் சுக் யியோல், அவசர நிலை ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது மட்டுமல்லாமல், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷமும்  நாடு முழுவதும் எழுச்சி பெற்றது

இதைத் தொடர்ந்து தென் கொரிய நாடாளுமன்றத்தில், யூன் சுக் யியோலை பதவி நீக்கும் தீர்மானம் முன்வைக்கப்பட்டு இந்த தீர்மானத்திற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உட்பட 204 பேரின் ஆதரவு கிடைத்ததால், அது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில், யூன் சுக் யியோல் சதி திட்டம்  தீட்டியதாக  குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அவர் பதவி நீங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 மேலும், அவசரநிலை பிரகடனத்தால் சட்டவிரோதமாக அதிகாரம் செலுத்தியதாகக் கூறி, சியோலில் உள்ள நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

அதன் பேரில், ஜனவரி 15 ஆம் தேதி அவர் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் போதே கைது செய்யப்பட்ட முதல் தென் கொரிய அதிபர் என்ற என்ற பெயரை பெற்றுள்ளார்

அவரது மீது தொடர்ந்த வழக்கு தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  நேற்று ஏப்ரல் 4, 2025 , இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது  

அதில், யூன் சுக் யியோலின் பதவி நீக்கம் உறுதி செய்யப்படுகிறது எனவும், அவர் மேற்கொண்ட குறுகிய கால ராணுவச் சட்டம் நாட்டின் மிக மோசமான அரசியல் நெருக்கடியை உருவாக்கியதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், வீதிகளில் மக்கள் மகிழ்ச்சியில் ஆடியும், ஆரவாரித்தும் கொண்டாடினர்.

 அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதனால், தென் கொரிய அரசியலமைப்பின் அடிப்படையில், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.