
பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஷேக் இஸ்மாயிலின் மனைவி பர்கத்நிஷா (வயது 48) கடந்த 6 ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது மர்மமான முறையில் சாலையோரமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். விபத்தா கொலையா என சந்தேகப்பட்ட போலீசார், முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்தனர். பின்னர் உடற்கூறாய்வு செய்தபோது கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இறந்த பர்கத்நிஷாவின் கணவர் ஷேக் இஸ்மாயில் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ஷேக் இஸ்மாயில் என்பவர் முட்லூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றும் இடத்தில் வேலை பார்த்த தீர்த்தாம்பாளையத்தைச் சேர்ந்த வீரம்மாள் என்பவருடன் திருமணத்தை மீறிய காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவை அவரது மனைவி பர்கத்நிஷா தொடர்ந்து எதிர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி, பர்கத்நிஷா கணவரை நேரில் சந்தித்து கணவரின் காதல் தொடர்பை எதிர்த்து சண்டையிட்டுள்ளார். அதனால் கோபமடைந்த வீரம்மாள், தனது மகன் அகில்ராஜை தொடர்புகொண்டு பர்கத்நிஷாவை கொல்ல திட்டமிட்டுள்ளார். அகில்ராஜ் தனது நண்பர் அஜயுடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் பர்கத்நிஷாவை பின்தொடர்ந்து, வழிமறித்து முகத்தில் தாக்கி பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் காதலி வீரம்மாள், அவரது மகன் அகில்ராஜ், அஜய் மற்றும் பர்கத்நிஷாவின் கணவர் ஷேக் இஸ்மாயில் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் வேறு யாராவது தொடர்புடையவர்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடர்கின்றனர்.