
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணச்சாலை, கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47), கூலித்தொழிலாளி ஆவார். இவரது முதல் மனைவி ஜெயந்தியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால், கடந்த 4 ஆண்டுகளாக அவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர், பழனிசாமி இரண்டாவது திருமணமாக ஜெயலட்சுமி (38) என்பவரை மணந்தார். ஜெயலட்சுமியின் முதல் கணவரின் 18 வயது மகளும் இவர்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், பழனிசாமி, ஜெயலட்சுமி ஆகியோர் கடந்த 5 நாட்களாக காணாமல் போனதால், உறவினர்கள் சந்தேகம் கொண்டு மகுடஞ்சாவடி போலீசாரிடம் புகார் செய்தனர். விசாரணைக்காக பழனிசாமியின் மகன் ஆகாஷ் (23) கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கடந்த 15ஆம் தேதி இரவு தந்தை பழனிசாமி மற்றும் சித்தி ஜெயலட்சுமியை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் உடலை தலை, கை, கால் என துண்டு துண்டாக வெட்டி மூன்று மூட்டைகளில் அடைத்து ஏகாபுரம், தாழையூர் ஏரிகளில் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் ஏகாபுரம் ஏரியில் இருந்து ஒரு மூட்டையை மீட்ட போலிசார் அதில் பழனிசாமி, ஜெயலட்சுமி ஆகியோரின் தலை, கை, கால்கள் இருந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து வைகுந்தம் தாழையூர் ஏரியில் இருந்து மற்ற பாகங்கள் அடங்கிய இரண்டு மூட்டைகளும் மீட்கப்பட்டன.
விசாரணையில், ஜெயலட்சுமியுடன் திருமணமான பிறகு, அவரது 18 வயது மகளிடம் பழனிசாமி தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதற்கு ஜெயலட்சுமியும் உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த ஆகாஷ், தந்தையும் சித்தியையும் கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் சேலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.