
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கடந்த மே மாதம், ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய தம்பதியர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அறச்சலூரைச் சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, குற்றவாளிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
இவ்வகையில் இரண்டு கொலை வழக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பது தெரியவந்ததால், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரிவுபடுத்துவதற்காக தமிழக அரசு இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறையான சி.பி.சி.ஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.
தற்போது சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வழக்கை கைப்பற்றி விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.