அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை :  இன்று தண்டனை அறிவிக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்

"News headline about the sexual harassment case of an Anna University student; Chennai Women's Court to deliver the verdict today."

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (32) என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால், அவர் டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக  போராட்டங்களை நடத்தின.

இதனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. அதற்காக மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஞானசேகரன் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன், போலியான அடையாளங்களை பயன்படுத்தி பண்ணை வீடு வாங்கியதும், மேலும் பல பெண்களிடம்  பாலியல் முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து,  இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது கடந்த  2025 ஜனவரி 5ஆம் தேதி  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் சாட்சி மற்றும் குறுக்கு விசாரணைகள் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தன. பின்னர் இரு தரப்புகளும் இறுதி வாதங்களை முன்வைத்தன.

அதையடுத்து மே 28ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் மீது 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

மேலும், அவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ஜூன் 2 ஆம் தேதி, ஞானசேகரனுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை விவரங்களை சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. இந்த வழக்கின் இறுதி முடிவை தமிழக மக்கள் மற்றும் மாணவர் சமூகமே பரபரப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது