
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கருவில் உள்ள குழந்தை பாலினம் அறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று வந்தது தெரியவந்துள்ளது. பெண் குழந்தை எனத் தெரிய வந்தவுடன் கருக்கலைப்பு செய்யும் மோசடியில் இடைத்தரகர்கள் ஈடுபட்டனர்.
சமீபத்தில் திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை பகுதியில் 8 கர்ப்பிணிப் பெண்கள் ஆட்டோவில் வந்தபோது, அது பழுதாகி நின்றது. அப்போது அங்கிருந்தவர்கள் விசாரிக்கையில், “கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறிய வந்தோம்” என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து கந்திலி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, முக்கிய இடைத்தரகர்களாகச் செயல்பட்ட 5 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், சாமநகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுகுமார் (60) என்பவர் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பும் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்.
சுகுமாருக்கு எதிராக ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும், பின்னர் வெளியே வந்து மீண்டும் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவரை கந்திலி போலீசார் மீண்டும் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், ஆளில்லா வீடுகளை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக ஸ்கேன் செண்டர்கள் நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.