இரவில் தொடர் கைவரிசை காட்டிவந்த முகமூடி கொள்ளையர்கள் கைது!

Masked burglars involved in a series of night-time thefts have been arrested.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தே குடும்பத்தினரை மிரட்டி 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே இரவில் அந்தக் கும்பல் இரண்டு டூவீலர்களை திருடியதாகவும், தொடர்ந்து மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கி திருப்பூரில் பதுங்கி இருந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ‘ரௌடி வண்டிப்பாதை முருகன்’ மீது மட்டும் 40 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும், ரபிக் மீது சுமார் 20 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருவரும் சிறையில் இருந்தபோது உருவான நட்பு, வெளியே வந்த பின் கொள்ளையடிக்க கூட்டணியாகி வேலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தடையில்லா இரவு கொள்ளைகளுக்கு பின்னணி என்ன, இன்னும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது.