
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6-ல் தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் மாளிகை முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகல், இரவு என 13 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கிறது என தேன்மொழி என்ற ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி, நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் தொடரலாம் எனவும், தற்போதைய இடத்தில் போராட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், சட்டத்திற்குட்பட்டு போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் பணித்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். சமூக ஆர்வலர்கள், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.