
தூத்துக்குடியில் ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும், எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வந்த ராஜா மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக ரூ.17 கோடி மோசடியில் அவருக்கு தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோசடி தொடர்பான விவரங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வந்த போலீசார், கடந்த சில வாரங்களாக ராஜாவை விசாரணை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், நிரூபிக்கப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.