வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்!

"Rs.1 lakh bribe money seized during raid at Regional Transport Office"

நாகை பால் பண்ணை சேரியில் வட்டார போக்குவரத்து அலுவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் போன்ற பணிகள் காரணமாக பொதுமக்கள் அதிகம் வருவதால் அலுவகம் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், இன்று அலுவலகத்தில் லஞ்ச பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அலுவலகத்திலுள்ள அதிகாரிகள், இடைத்தரகர், வெளியாட்கள் என யாரையும் வெளியே அனுமதிக்காமல் வாயிலை பூட்டி விட்டு அலுவகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களிடம் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் அறை, பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, அலுவலர் வாகனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்த போலீசார், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.