
சென்னை பெருநகராட்சி அடையாறு மண்டலம் – 13-வது வார்டு பகுதியில் தரமணி – சதாசிவம் பிரதான சாலை அமைந்துள்ளது. இங்கு தனியார் நிறுவனம் ஒன்று புதிய கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
இதற்காக பெரிய பள்ளம் தோண்டி, கனரக இயந்திரங்களை வைத்து பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று (ஜூலை 7) கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் இருந்து சாலை வரை சுமார் 150 அடி நீளத்திற்கு சாலை நடுவே திடீரென பிளவு ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் சாலையில் பெரிதாக பிளவு ஏற்பட்டதை பார்த்ததும் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து பாதுகாப்பான இடங்களுக்குத் திரண்டனர். உடனே மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்து தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் இறங்கினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிளவின் அளவு மற்றும் காரணங்களை ஆய்வு செய்தனர்.
கட்டுமான நிறுவனத்தின் பள்ளம் தோண்டும் பணி காரணமாக சாலைக்கு அடியில் நிலத்தடிமண் அமைப்பு பாதிக்கப்பட்டதாலா இந்த விரிசல் ஏற்பட்டது? அல்லது வேறு காரணமா? என்பதை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சாலையில் வாகனங்களை செல்ல அனுமதிக்காத வகையில் முழு தடையும் வைக்கப்பட்டுள்ளது.