ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது !

News headline about the arrest of Chitra Devi, the mother-in-law, in connection with Rithanya’s suicide case.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக தொடர்ச்சியாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்பே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதன் விசாரணையில் கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கோரியதால், நீதிபதி விசாரணையை வரும் 7ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

ரிதன்யா தரப்பு வக்கீல்கள் தெரிவித்ததாவது, “ஒரு அமர்வு நீதிமன்ற வழக்கில் இவ்வளவு சீக்கிரம் 10 நாட்களுக்குள் ஜாமீன் மனு தாக்கல் செய்வது இதுவரை நடக்கவில்லை. அரசியல் மற்றும் பண பலம் காரணமாகவே இவர்கள் உடனே ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்” என தெரிவித்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் ரிதன்யாவின் தற்கொலைக்கு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் சித்ரா தேவியை இதுவரை கைது செய்யவில்லை என புகார் எழுந்திருந்தது

இந்த நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக்கை சந்தித்து, சித்ரா தேவியை உடனே கைது செய்ய வேண்டும் என மனு வழங்கியிருந்தனர்.

அந்த மனுவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட சேயூர் போலீசார் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.