
மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 2009ஆம் ஆண்டு தனது வீட்டுக்கான வரி நிர்ணய விவகாரத்தில் அங்குள்ள வருவாய் உதவியாளர் சுபேர் அலி முகமதுவை சந்தித்தார். அப்போது அவர் ரூ.8,000 லஞ்சமாகக் கோரி, பின்னர் ரூ.6,500 கேட்டதாக கூறப்படுகிறது.
முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பொறிவைப்பு நடத்தி, முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூ.6,500 லஞ்சம் பெற்றபோது சுபேர் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்று (13.08.2025) நீதிபதி புவியரசு, லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் என தண்டனை விதித்தார். அபராதம் செலுத்தாத பட்சத்தில் தலா 6 மாதம் கடுங்காவல் சிறை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இரண்டு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் சாட்சிகளை ஆஜர்படுத்தி ஒத்துழைத்ததோடு, அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடதக்கது