
மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, டிஎஸ்பி சுந்தரேசன், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். “நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்படுகிறார்கள்; வளைந்து கொடுக்காத காரணத்தால் எனக்கு வாகனம் கூட வழங்கவில்லை. இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் நிலைமை உள்ளது” என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், “ஏழு வருட பணி இருக்கும்போது விருப்ப ஓய்வு பெற்று கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கபடுகிறது” என்றார்.
இந்நிலையில், சுந்தரேசன் மீது இதற்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்ததாகவும், அதற்காக துறை ரீதியான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக், இன்று காலை மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவல் அதிகாரிகளை விசாரித்தார்.
விசாரணை முடிவில், டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.