
பாராளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெற உள்ள ஆறு உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்ப, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஜூலை 24-ந்தேதியுடன், தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி ஆகியோரின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து, இந்த ஆறு இடங்களுக்கு புதிய மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மனுதாக்கல் இறுதிநாளாகும் நிலையில், நாளை (ஜூன் 10) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. மேலும், ஜூன் 12-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெறலாம்.
போட்டியின்றி தெரிவு அல்லது போட்டி நிலவரம் எதிர்வரும் நாட்களில் உறுதியாகும். போட்டி ஏற்பட்டால், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.