
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (44). விராலிமலை முருகன் கோயில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைக்கவும் வலியுறுத்தி, அவர் நேற்று காலை தேசியக் கொடியுடன் விராலிமலை முருகன் கோயில் கோபுர உச்சிக்கு ஏறி போராட்டம் நடத்தினார்.
தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆறுமுகம் போராட்டத்தைத் தொடர்ந்தார். மீட்பு குழுவினர் மேலே சென்று அவரை மீட்க முயன்றபோது, அருகில் வந்தால் குதித்து விடுவேன் என அவர் எச்சரித்ததால், அவர்கள் மீண்டும் கீழிறங்கினர்.
பின்னர் தாசில்தார் ரமேஷ், உங்கள் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலிக்கப்படும், கீழே இறங்கி வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்கி, “எப்படி ஏறினேனோ அப்படியே நானே இறங்குகிறேன், யாரும் அருகில் வர வேண்டாம்” என்று கூறி ஆறுமுகம் இறங்கத் தொடங்கினார்.
அப்போது கோபுரத்தில் இருந்த பொம்மைகளைப் பிடித்து இறங்கும் நிலையில், திடீரென அவர் தவறி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார். தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் விராலிமலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.