
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். மாலத்தீவிலிருந்து தனியார் விமானத்தில் இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடிக்கு வர உள்ளார்.
அங்கு, 452 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், அதனைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில், மொத்தம் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
தூத்துக்குடி நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரதமர் மோடி தனியார் விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (ஜூலை 27) காலை, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர், அங்குள்ள ராஜேந்திர சோழனின் நினைவாக உருவாக்கப்பட்ட நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்த பயணத்தின் போது, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமரை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.