
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ராஜபதி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (44) டெய்லராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி முத்து விஜயா (38) மற்றும் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், ஏரல் அருகே சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த ரவி (38) அங்குள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் முத்து விஜயாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், முத்து விஜயா தனது இரண்டு மகள்களுடன், ரவியுடன் சேர்ந்து தூத்துக்குடி அருகே சோட்டையன்தோப்பு, ஆ.சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தார்
ஆனால் ரவிக்கு ஏற்கனவே மனைவி மேரி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இதனால் இவர்கள் ரவியின் தகாத உறவை அறிந்து ரவியை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். சமீப மாதங்களில், ரவி தூத்துக்குடி 3வது மைல் மடத்தூர் சாலையில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, ரவி சோட்டையன்தோப்பு மெயின் ரோட்டில் உள்ள பாஸ்ட் புட் கடையில் உணவு வாங்கச் சென்றபோது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தாளமுத்துநகர் போலீசார் நடத்திய விசாரணையில், முத்துராமலிங்கத்தின் 17 வயது மகன் மற்றும் அவரது உறவினரான பால்பாண்டி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாண்டு பி.இ படித்து வந்த சிறுவன், தாயை அபகரித்த ரவியை பழிவாங்கும் நோக்கில் பல நாட்களாக பின் தொடர்ந்து நோட்டமிட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் உறவினருடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.