அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா!

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா!

அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் இலாக, மேலும் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்ப்பு.

நடப்பு ஆட்சிக் காலத்தில் ஆறாவது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது,  அதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை மற்றும் காகித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமைவை ஏற்குமாறு முதலமைச்சர் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இவர்களுக்கான பதவிபிரமாண நிகச்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

செந்தில் பாலாஜி ராஜினாமா பின்னணி என்ன?

2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார், அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட மோசடி புகார்கள் அவர் மீது எழுந்தன,

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரைக் கைது செய்தது. அதன் பிறகு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது. ஒரு கட்டத்தில் தமிழக அமைச்சரவையில் இருந்தும் விலக்கப்பட்டார்.

இதையடுத்து 15 மாதங்களுக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றாவது நாளே அவர் வகித்த இலாக்காவை முதலமைச்சர் மீண்டும் வழங்கி அமைச்சராக்கினார்.

செந்தில் பாலாஜி மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவரை மீண்டும் அமைச்சராக்கியிருப்பது மூலம், விசாரணையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடும், எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன் கூடவே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறையும் தனியாக மனு தாக்கல் செய்தது. இந்த இரண்டு மனுவையும் ஒரே வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையயின் போது PMLA வழக்கில் ஜாமீன் கிடைப்பது இப்பொழுதெல்லாம் கடிமனாது. இருப்பினும் அதையும் மீறி உங்களுக்கு ஜாமீன் வழங்கினால், நீங்கள் மீண்டும் அமைச்சராக பொருப்பேற்று இந்த நீதிமன்றத்தை வேறு விதமாக கையாண்டு கொண்டிருக்குறீர்கள்.நாங்கள் செய்தது தவறு என நீங்களே நிரூபித்துவிட்டீர்கள். நாங்களும் அதை ஒப்புக்கொள்கிறோம் என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.

மேலும் ஜாமீன் வேண்டுமா?…அமைச்சர் பதவி வேண்டுமா?…என்பது குறித்து வரும் ஏப் 28 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

பொன்முடி ராஜினாமா பின்னணி என்ன?

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பொன்முடி மீதான சர்ச்சைகைள் அணிவகுத்தன,

மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை ‘ஓசி பயணம்’ என பேசியது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சிப்பது என பொன்முடியின் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

திமுக பொதுக்குழு கூட்டத்திலேயே இது தொடர்பாக  முதலமைச்சர் தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்.

இந்நிலையில் கடந்த ஏப் 06 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொன்முடி, சைவம், வைணவம்  ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு பேசியவை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடியை நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், “சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

‘கட்சியே நடவடிக்கை எடுத்தும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது” எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

இந்த சூழலில் தான் செந்தில் பாலாஜி உடன் சேர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக பொன்முடியும் அறிவித்துள்ளார்.