மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த போலீஸ் கணவன்!

"A police officer accused of harassing his wife for dowry, raising concerns over domestic violence within law enforcement families."

மதுரை காதக்கிணறு பகுதியை சேர்ந்த தங்கபிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் பூபாலன் என்பவருக்கும் 2017 ஜூலை 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

திருமணத்தில் தங்கபிரியா வீட்டார் 60 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை வழங்கியிருந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு, மாமனார் செந்தில்குமரன், கணவர் பூபாலன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் தங்கபிரியாவை அடித்து சித்ரவதையளித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் புதிதாக வீடு வாங்குவதற்காக தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி தங்கபிரியாவை பூபாலன் அடித்து மிரட்டி, “பணம் தரவில்லை என்றால் உன்னை கொன்றுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்வேன்” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தங்கபிரியா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அப்பன்திருப்பதி போலீசார் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா மற்றும் நாத்தனார் அனிதா ஆகியோர்மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா போன்ற பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவங்கள் சமீபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் குடும்பத்திலேயே இவ்வாறு கொடுமை நடந்திருக்கிறது என்பதால் அதிர்ச்சி அதிகரித்துள்ளது.