
கோபிகா என்ற 28 வயதுடைய பெண்மணி RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ ஒன்றினை பார்வையிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ரயிலில் பயணிகள் பயணம் செய்யும் காட்சியும் அதனிடையில் சுமார் 35 வயதுடைய ஆண் நபரின் ஆபாச செய்கையும் இருந்துள்ளது. இந்த நபர் ரயிலில் கதவருகே அமர்ந்து கொண்டு எதிரே நின்ற பெண்மணியிடம் ஆபாசமாகவும் அருவருக்குமாறும் சைகை செய்தது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவானது கடந்த ஜூன் மாதம் 28ம் தேதியன்று மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட காவலர் கோபிகா RPF உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 9.30 மணிக்கு திருவான்மியூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார் மேலும் இது தொடர்பாக ரயில் நிலைய பகுதிகளில் அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் இந்திரா நகர் ரயில் நிலையத்தில் அதே போன்று உருவ ஒற்றுமையுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சி அம்மா பட்டி துர்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த தண்டபாணியின் மகன் அழகர் ராஜா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் அந்நபர் ரயிலில் பெண் முன்னால் தவறான முறையில் நடந்து கொண்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அழகர் ராஜாவை, சசிகலா, பரந்தாமன், மகாலட்சுமி, கார்த்திக், இராமாத்தாள் உள்ளிட்ட ரயில்வே போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 13 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.