
நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்த காவலர் குடியிருப்பில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த தங்கமாரி என்ற பெண் ஆயுதப்படை தலைமை காவலரின் வீட்டில் இருந்து 30 சவரன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளில் சந்தேகப்படும் ஆட்கள் எவரும் தெரியவில்லை. ஆனால் திருட்டு நடந்த நேரத்தில் காவலர் குடியிருப்பில் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் என்ற காவலரை கைது செய்தனர்.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து கடன் சிக்கலில் இருந்த மணிகண்டன், அந்த பணத்தை அடைப்பதற்காகவே நகையை திருடியதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.
நகையை பதுக்கி வைத்திருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.