
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , தமிழ்நாட்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் செயல்படுத்தபடவுள்ள மின்சாரக் கட்டண உயர்வில் வீடுகளுக்கு விலக்கு அளித்துள்ள அரசின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாமக தலைவர் வெளியீட்டுள்ள அறிக்கையில் வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது.என்றும் , வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால் தான் என்றும் தெரிவித்துள்ளார்
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023-ம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட்டு, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, பின் தேதியிட்டு வீடுகளுக்கும் சேர்த்து மின்கட்டணத்தை உயர்த்தியவர்கள் தான் என்பதை தமிழ்நாடு மறக்கவில்லை.
எனவே, வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான். மேலும், மின் கட்டண உயர்வு கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு பரப்பப்படுவதை எதிர்த்து, இதனால் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மூன்று முறை உயர்த்தப்பட்ட கட்டணங்களால் வர்த்தகச் சுமை அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்
இந்நிலையில், வீடுகளுக்கு மட்டுமின்றி அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் இந்த உயர்வை நிறுத்தவேண்டும் என்றும், வணிக மற்றும் தொழில்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.