
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் நவுபல் (17) பிளஸ் டூ படிக்கும் மாணவர். அவர் நேற்று இரவு டியூசன் முடித்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டு அருகே தேங்கி கிடந்த மழைநீரில் அவர் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்தது. திடீரென மின்சாரம் பாய, நவுபல் துடித்து விழுந்தார்.
உடனே அங்கு இருந்தவர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால் மின்சாரம் நிறுத்த நடவடிக்கை தாமதமானதால் மாணவர் உயிருக்கு போராடியபடியே இருந்தார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவத்தால் பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மின்வாரிய அலட்சியத்தை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.