நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

A petrol bomb was hurled in Tirunelveli, causing panic and tension in the area

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் வசித்து வரும் சுந்தரத்திற்கு, கூலி தொழிலாளிகளாக பணிபுரியும் இளங்கோ (22), தமிழன் (21) என்ற இரு மகன்கள் இருக்கின்றனர் 

கடந்த சில தினங்களுக்கு முன், இளங்கோ மற்றும் தமிழன் ஆகியோர் நண்பர்களுடன் அருகிலுள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.

அந்த நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருடன் இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிய தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 திருவிழா நடைபெற்ற கோவிலில் இருந்தவர்கள் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்

இந்த தகராறு நிகழ்ந்த இரவு கழிந்தபின், சுந்தரத்தின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 1 மணியளவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர்.

 வீசப்பட்ட குண்டு வீட்டின் கதவுப் பகுதியில் விழுந்து தீப்பற்றியது. சத்தம் கேட்டு விழித்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து சுந்தரம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்ததையடுத்து  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், பெட்ரோல் குண்டு வீசியவர்களைப் பற்றிய தகவல்களை திரட்ட  தொடங்கியுள்ளனர்

மேலும், சம்பவத்தன்று கோவிலில் ஏற்பட்ட தகராறுடன்,  தொடர்புடைய நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது