
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கிளர்ச்சி எழுப்பினார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்திய அவர், 10 நாள் கெடுவும் விதித்தார்.
இதனால் கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறிக்கும் நடவடிக்கை எடுத்தார். ஆனால் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இந்நிலையில் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரைச் சந்தித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது, அ.தி.மு.க. இணைப்புக்கான அழுத்தத்தை திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, செங்கோட்டையனின் இணைப்பு முயற்சி முட்டுக்கட்டையாகிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செங்கோட்டையன் மீண்டும் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரைச் சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அவரை அ.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கும் திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக கட்சி மூத்தவர்கள் கூறுகின்றனர்.