திறக்க தயாரான பாம்பன் பாலம்: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

நாளை திறக்கப்படவுள்ள பாம்பன் பாலம் மகிழ்ச்சியில் பொதுமக்கள்

கடந்த இரண்டு வருடங்களாக ராமேஸ்வரத்துக்கான நேரடி ரயில் சேவை இல்லாததால், பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துள்ளது 

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் மண்டபம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து பேருந்துகள் மூலம் ராமேஸ்வரத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காலப்பகுதியில், ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் கூட வாடகை வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட வேண்டிய நிலை காணப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வாடகை, மண்டபத்தில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயில் கட்டணத்தை விட இரட்டிப்பு விலையில் காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

அதேபோல், பிற மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மளிகைப் பொருட்களும் நேரடி போக்குவரத்து சேவை இல்லாததால் தாமதமாகவே கிடைத்ததுடன், அதிகச் செலவு ஏற்பட்டதால் வியாபாரிகள் நிதி நெருக்கடியில் சிக்கியதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் திறக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது அவை முழுமையாக முடிவடைந்துள்ளன.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, நாளை இந்தியா திருப்புவதுடன் ராமேஸ்வரம் சென்று பாம்பன் பாலத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது பக்தர்களின் வருகையை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் எனவும், ராமேஸ்வரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது நல்ல துவக்கமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.