
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிப்பது தொடர்பான பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே 13ம் தேதி உடன் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மரபு படி அரசுக்கு பரிந்துரை செய்தார்.
(மரபுபடி ஓய்வு பெறும்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தனக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவரைத் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்வார்.)
இதையடுத்து இந்த பரிந்துரையை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குடியரசு தலைவருக்கு அனுப்பினார். தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52 தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் நியமக்கப்படுகிறார் என்றும் இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி வரும் மே 14ம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் பி.ஆர். கவாய் அடுத்த 6 மாத காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். ஏனென்றால் வரும் நவம்பர் மாதத்துடன் பி.ஆர். கவாய் ஓய்வு பெறுகிறார்.
அதன்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் தலித் சமூகத்தை சார்ந்த இரண்டாவது நபர் ஆவார். இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கவாய்?
1960 நவம்பர் 24 அன்று அமராவதியில் பிறந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கேரளா மற்றும் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த இரா.சூ. கவாய் இவரது தந்தை ஆவார்.
1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் சேர்ந்த இவர், முன்னாள் தலைமை வழக்கறிஞர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மறைந்த வழக்கறிஞர் ராஜா எஸ். போன்சலேவுடன் 1987 வரை பணியாற்றினார்.
1987 முதல் 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.அதனை தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியல் மற்றும் நிர்வாக சட்டங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1992 முதல் 2000 வரை, நாக்பூர் கிளையில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் பொது வழக்கறிஞராகவும் பணியாற்றினார். பிறகு, 2000ம் ஆண்டு முதல் அரசு வழக்கறிஞராகவும் பொது வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
2003ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பிறகு 2005ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2019ம் ஆண்டு மே 24ம் தேதி அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் மே 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.