
பாஜகவின் 13வது தமிழ்நாடு மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல் பயணம் அதிமுகவில் தொடங்கி, தற்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் ஆனது எப்படி?
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
குமரி மாவட்டம் வைத்தீஸ்வரம் எனும் கிராமத்தில் பிறந்த நயினார்,முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். எம்.ஜி.ஆர் மீதுள்ள ஈர்ப்பால் 1989-ல் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்ட நயினார் நகர செயலாளர், இளைஞர் அணி செயலாளர், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவையின் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் என அதிமுகவின் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
முதன்முதலில் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மின்சாரம், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றினார்.
மீண்டும் 2006 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடந்த நயினார். பின்னர் அதே திருநெல்வேலி தொகுதியில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, 2017 ஆம் ஆண்டு அதிமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்ததுமே பாஜக மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாஜக கொள்கைகளை தமிழ்நாட்டில் பரப்ப தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். ஆண்டாள் குறித்து சர்ச்சையாக பேசிய வைரமுத்துவின் நாக்கை வெட்டுபவருக்கு 10 கோடி பரிசு என இவர் அறிவித்தது தமிழக அரசியலில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2019 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 23107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,தற்போது பாஜக சட்டப்பேரவை குழு தலைவராகவும், தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேசிய பாஜக தலைமை முணைப்பு காட்டி வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் அதிமுக தலைவர்களை பற்றி அவதூறாக பேசியதாக அண்ணாமலை மீது கடும் கோவத்தில் அதிமுக தலைவர்கள் உள்ளனர். எனவே பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கினால், பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அதிமுக சார்பில் கோரிக்கையை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்த அதிமுகவினர் இது தொடர்பாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து அதிமுகவின் கோரிக்கை ஏற்க்கப்பட்டதாகவும், அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவரை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.
இதையடுத்து பாஜகவின் புதிய மாநில தலைவர் யார் என்பதையும், அதிமுகவுடன் கூட்டணி குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார்.
பாஜக மாநில தலைவர் போட்டியில், போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று சில விதிமுறைகளுடன் பாஜக தலைமை அறிவித்தது, அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அறிவித்தது.
அண்ணாமலை ஏற்கனவே தலைவர் பதவி போட்டியில் நான் பங்கேற்க்க போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
கடந்த ஒரு மாத காலமாகவே பாஜக மாநில தலைவர் குறித்த பேச்சில் அதிகமாக அடிப்பட்ட பெயர் நயினார் நாகேந்திரன் ஆனால் கட்சியில் சேர்ந்து 8 வருடங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளதால் விதிப்படி இவர் போட்டியிட முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவி வந்தது.
இந்நிலையில் அண்ணாமலை, தமிழிசை, வானதி,பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாஜக முக்கிய தலைவர்கள் நயினார் நாகேந்திரனை முன்மொழிந்தனர். இதையடுத்து மாநில தலைவர் போட்டிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்தார்.
இதன் பின் அமித்ஷா தனது X பக்கத்தில் மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளாக தெரிவித்தார். இதன் மூலம் போட்டியின்றி 13வது தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்தாலும் “எம்ஜிஆர், ஜெயலலிதா எப்போதும் எனக்கு குரு” என சொல்லக்கூடியவர். மேலும் முன்னார் அதிமுக நிர்வாகி என்பதால், அதிமுகவுடன் கூட்டணி உறவு சுமூகமாக இருக்கவே இவரை மாநில தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டராங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.