
நாக்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுபான்மை ஜனநாயக கட்சி தலைவர் பாகிம் கானின் வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற கோரி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 17ம் தேதி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் புனித நூல் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியை தொடர்ந்து நாக்பூர் முழுவதும் பெரும் கலவரம் வெடித்து. போராட்டத்தில் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.
மேலும் கலவரத்தில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சிறுபான்மை ஜனநாயக கட்சி தலைவர் பாகிம் கான் மற்றும் யூஷுப் ஷேக் உட்பட 104 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையெடுத்து யஷோதரா நகர் சஞ்சய் பாக் காலனியில் உள்ள பாகிம் கானின் வீட்டை, நாக்பூர் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, இதனால் கட்டப்பட்ட வீட்டை இடிக்கப்போவதாக 24 மணி நேரத்துக்கு முன் நாக்பூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இதேபோல் யூஷுப் ஷேக்கின் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் அந்த வீட்டையும் இடிக்க முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பாகிம் கானின் வீட்டை புல்டோசர்களை பயன்படுத்தி இடித்தனர். இதனிடையே, வீடுகளை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே அதிகாரிகள் பாகிம் கானின் வீட்டை இடித்து விட்டனர். யூஷுப்பின் வீட்டின் ஒரு பகுதியையும் இடித்துவிட்டனர். கோர்ட் உத்தரவினை தொடர்ந்து இடிப்பு பணி பாதிலியே நிறுத்தப்பட்டது.