
மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் கார்த்திக் சம்பவத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி ராமலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் – எமிலியம்மாள் தம்பதியரின் ஒரே மகனான கார்த்திக் (வயது 10), ஆவடியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், தாயுடன் அருகில் உள்ள வீடொன்றுக்கு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் , மரத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றதாகவும் இந்தச் சூழ்நிலையிலேயே அவர் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால், கார்த்திக்கின் தாய் செய்தியாளர்களிடம் கொடுத்த தகவலில், இது ஒரு விபத்து அல்ல எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தனது மகன் கார்த்திக் வீட்டின் வெளியே சைக்கிள் ஓட்டி கொண்டு உறவினர் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளர் லிவிங்ஸ்டன் என்பவர் சிறுவர்களை மாடியில் உள்ள தென்ன கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் வேலை செய்ய அழைத்து சென்றுள்ளார். மகன் கார்த்திக்குடன் சென்ற சிறுவர்கள் அங்கிருந்து வந்து விடவே கார்த்திக் மட்டும் வேலை செய்து கொண்டிருந்த போது மர்மமான முறையில் திடீரென கீழே விழுந்து விட்டதாக கூறினார்.
தனது மகன் உயிரிழப்பில் மர்மம் உள்ளது. இது பற்றி வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பேசி தற்போது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். இது தங்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இது பற்றி ஆவடி போலீஸில் புகார் அளித்துள்ளோம்,
காவல் துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.