“அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” செங்கோட்டையன்

AIADMK senior leader Sengottaiyan says his primary goal is to bring unity among all party members and factions.


அ.தி.மு.க. வட்டாரத்தில் “வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் தேர்தல் வெற்றி சாத்தியம்” என்ற செங்கோட்டையன் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஹரித்துவார் ஆன்மீக பயணத்துக்குச் செல்கிறேன் என்று கூறி டெல்லி புறப்பட்ட அவர், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

டெல்லி பயணத்தை முடித்து கோவை திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, “ஹரித்துவார் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். ஆனால் டெல்லி சென்ற உடனே அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன் மூலம் உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. இயக்கம் வலிமை பெற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் கருத்துக்களை எடுத்துச் சென்றோம்” என்றார்.

மேலும், “உள்துறை அமைச்சரை சந்திக்கும்போது ரயில்வே துறை அமைச்சர் அங்கு வந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்பு பத்து மணிக்கு புறப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே புறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் அனைவருக்கும் சிரமமாக உள்ளது. காலை 3 மணிக்கே சென்னை சென்றுவிடுகிறது. அந்த நேரத்தை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டேன். அவர் பரிசீலிப்பதாக கூறினார். இயக்கம் வலிமை பெறுவதற்கான பணிகளை தொடர்ந்து செய்வேன்” எனக் கூறினார்.