2 மாதங்களுக்கு முன் நடந்த கொலை : கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Police recover a decomposed body from a well, linked to a murder that occurred two months ago.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன், கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதாகி, நெல்லை மத்திய சிறையில் இருந்தபோது முருகப்பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பாலமுருகனின் தந்தை கோவை, மலுமிச்சம்பட்டி அருகே உள்ள குதிரைப் பண்ணையில் பணிபுரிவதால், குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, முருகப்பெருமாள், பாலமுருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது நண்பர் ஜெயராமனுக்கு கோவையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டார். இதற்காக பாலமுருகன், முருகப்பெருமாளையும் ஜெயராமனையும் மலுமிச்சம்பட்டிக்கு வரவழைத்தார்.

மூவரும் பண்ணைக்கு அருகிலுள்ள இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முருகப்பெருமாளுக்கும் ஜெயராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகப்பெருமாள், ஜெயராமனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர், இருவரும் சடலத்துக்கு கல்லைக் கட்டி, அருகிலுள்ள கிணற்றில் எறிந்து விட்டு தப்பிச் சென்றனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாலமுருகனும் முருகப்பெருமாளும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, கிணற்றுக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்புத் துறையினர், 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை இறைத்து, ஜெயராமனின் உடலை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இருவரையும் கைது செய்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் மலுமிச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.