திண்டுக்கலில் காதல் குழப்பத்தால் கொலை: ராணுவ வீரரின் மனைவி உள்ளிட்ட 6 பேர் கைது

Six people, including an army soldier’s wife, arrested in Dindigul for a murder linked to a love affair.

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தோட்டப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

சடலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சடலமானது வேடசந்தூர் பூதாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி எனத் தெரியவந்தது. ஜோதிமணி தன் கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்தவர் என்பது தெரியவந்தது. இது தொடக்கத்திலேயே கொலை என சந்தேகித்த போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர்.

ஜோதிமணி, ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் மனைவி கோமதியுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த உறவு காரணமாக கோமதி, தனது கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ஆனால் அண்மையில் கோமதிக்கு பக்கத்து ஊரில் சலூன் கடை வைத்திருந்த ஸ்டாலின் என்ற இளைஞரிடம் காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து கோமதி, ஜோதிமணியிடம்  அடிக்கடி வாக்குவாதங்களும் நடந்துள்ளன. இதில் கோமதியின் புதிய காதல் குறித்து ராணுவத்தில் பணிபுரியும் தனது கணவரிடம் தெரிவிக்கப்போவதாக ஜோதிமணி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க கோமதி, தனது காதலர் ஸ்டாலினுடன் சேர்ந்து ஜோதிமணியை கொல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம், ஜோதிமணி விரும்பி சாப்பிடும் உணவான உளுந்தங்களிக்குள் தூக்குமருந்து கலந்து கொடுத்து, பின்னர் தூக்குமருந்து கலந்த காபியும் வழங்கியுள்ளார்.

இதனை சாப்பிட்ட ஜோதிமணி மயங்கி விழுந்த பிறகு, கோமதி மற்றும் ஸ்டாலின் இருவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இதில் கோமதியின் பெற்றோர் நீலா மற்றும் நடராஜனும், சடலத்தை கிணற்றில் தூக்கிச் செல்ல உதவிய ஸ்டாலினின் நண்பர்கள் ஆரோக்கிய சாமி மற்றும் குட்டியும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளனர்.

கோமதி போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும்போது, “ஜோதிமணி தனது இரகசியங்களை வெளியிடப்போவதாக மிரட்டியதால் தான் பயத்தில் கொலை செய்தோம்” என தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இவ்வாறு, கொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்த 6 பேருடன் கோமதி, ஸ்டாலின், அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள்அனைவரையும் போலீசார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்