
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 17ஆம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் அலுவலகம் வரை நடந்துச் செல்லும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவத்தையடுத்து, டிஎஸ்பி சுந்தரேசனுக்கும், அதே பகுதியின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, “எங்க இருக்கிறீங்கன்னு சொல்லுங்க, அங்கே இறங்கிக் கொண்டு, கார் வந்து சேரும்” என தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறியதால்தான் தன்னுடைய அதிகாரம் அவமதிக்கப்பட்டதாக சுந்தரேசன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தைக் கருத்தில் கொண்டு, சில அமைப்புகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பிக்கு ஆதரவாக கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, மேலதிக அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்திரனை வடக்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார்.இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.