சுங்கச்சாவடியை கட்டணமில்லாமல் கடக்க போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தியவர் கைது!

சென்னை எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் ரவிக்குமார் என்பவர் மது போதையில் காரை ஓட்டிச் சென்றதாக சந்தேகித்து போலீசார் விசாரித்தனர்.

காரில் இருந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், ரவிக்குமாரின் பெயரில் மூன்று போலி போலீஸ் அடையாள அட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுங்கச்சாவடியை கட்டணம் செலுத்தாமல் கடக்க இந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான மாதிரி அடையாள அட்டை இன்ஸ்டாகிராமில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தன்னுடைய புகைப்படத்தைச் சேர்த்து தயாரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளை ஏமாற்ற முயற்சித்ததாக ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.