
அமைச்சர் பொன்முடி சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறைக்கு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாகவே பொன்முடியின் அவதூறு பேச்சு தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இதற்கான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்துள்ளதாகவும், அதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என தீர்மானிக்கப்பட்டதால் வழக்கு முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் தரப்பில் ஆஜரான விகாஷ் சிங், அமைச்சர் கூறியவற்றை முழுமையாக கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், இது 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைப் பற்றிய உரையேயாகும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மதுரை உச்சநீதிமன்ற அமர்வில் ஏற்கனவே இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால் , மீண்டும் அதே விவகாரத்தை முதன்மை அமர்வு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாதங்களை கேட்டபின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது, அந்த சமயத்தை பின்பற்றுவோரின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்
இது வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதாகவும், இதற்காக அவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வெறுப்பு பேச்சை சகிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி,ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அதனைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறார் எனக்கு கூறி, அவருக்கு எதிராக தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.