துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:– தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது. இந்த  அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்ற  தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு  ஒப்புதல் அளித்தது.

அதன் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசு தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்றும்  சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் 2 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை.

மேலும் பாஜகவை சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. உடனே விசாரிக்காவிட்டால் “வானம் இடிந்து விழுந்து விடாது” என்றும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “பல்கலைக் கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக தமிழக அரசு சட்டம் இயற்றப்பட்டுள்ளது,” என்றார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலானது.

மேலும் விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும். பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டத்தில்கூட, வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது,” என்று வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன், “வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்க வேண்டும். விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்,” என்றார்.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைக்க முடியாது என்று கூறினர். மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.