கள்ளக்குறிச்சி பள்ளியில் மதிய உணவில் பல்லி – 54 மாணவர்கள் உடல்நலக்குறைவு, பெற்றோர் முற்றுகை

"Midday meal contamination incident in Kallakurichi school where a lizard was found in the food, causing 54 students to fall ill."


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது.

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 54 மாணவர்கள் திடீரென மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், குழந்தைகளை வேனில் கொண்டு சென்று வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தெரியவந்ததும் , பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளியில் பரபரப்பு நிலவியது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுத்தம் குறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மீதமுள்ள மாணவர்களும் பரிசோதனைக்காக அரசு பேருந்து மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பள்ளியில் ஒரே ஒரு சமையலர் மட்டுமே பணியாற்றி வருவதால், சுகாதாரமற்ற சூழலில் உணவு தயாரிக்கப்பட்டதாகவும், பல்லி விழுந்ததும் அதற்கே காரணம் எனவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் சமையலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் மக்களிடையே எழுந்துள்ளது.