
திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ராஜேந்திரன் (47) என்ற கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கும்பகோணம் மருதாநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 2022-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2023 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் சமையல் உதவியாளராக பணியாற்றிய ராஜேந்திரன் நேற்று அதிகாலை மற்ற கைதிகளுடன் கேண்டீனுக்கு பணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் காலை கணக்கெடுத்தபோது ராஜேந்திரன் அங்கிருந்து மாயமாகியிருந்தார். உடனடியாக சுற்றுப்புறங்களில் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
சிறை நிர்வாகம் தரப்பில் கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ராஜேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.