
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் புகழ்பெற்ற சிறப்பு தலமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்
இந்நிலையில், வருகிற ஏப்ரல் 4-ந் தேதி மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ளதால் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல், கோவிலின் மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதன் காரணமாக, ஏப்ரல் 1-ந் தேதி மாலை 5 மணி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை, பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசிக்கலாமென்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை மூன்று நாட்களில் மலைக்கு வரும் பக்தர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பக்தர்கள் படிக்கட்டு வழியாக அல்லது கோவில் பஸ்கள் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது