
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பெரும் சோக சம்பவம் தொடர்பாக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங்கிணைந்த ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் இன்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.
காவல்துறை சார்பில் விசாரணைக்குப் பொறுப்பான கரூர் டிஎஸ்பி செல்வராஜ் மாற்றப்பட்டு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் இரவுக்குள் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.