கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman states she does not wish to blame anyone regarding the Karur crowd tragedy.


கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூருக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரில் பெரும்பான்மையானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வீட்டின் முதன்மை வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் துயரம் சொல்ல முடியாதது. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. பிரதமர் நேரடியாக வர முடியாத சூழலில், அவரின் அறிவுறுத்தலின்படி நானே வந்து ஆறுதல் தெரிவித்தேன்.

பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். நிதியுதவி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தப்படும்.

இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் எங்கும் நிகழக் கூடாது. கூட்டம் த.வெ.க. எதிர்பார்த்ததை விட அதிகமாகச் சேர்ந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். அவர்களின் கருத்துகளை பிரதமர், உள்துறை அமைச்சரிடம் நான் தெரிவிப்பேன்.

மாநில அரசு சொல்கிறது, செய்கிறது என்பதைக் கண்காணிக்க நான் வரவில்லை. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில்தான் வந்துள்ளேன். இத்தகைய துயர நிகழ்வுகளில் பல்வேறு கோபம், விமர்சனம் எழுவது இயல்புதான்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.