
தமிழிலிருந்து தான் கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் அப்படி என்ன உங்களுக்குஈகோ எனவும் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை எனவும் சீமான் கருத்து வெளியிட்டுள்ளார்
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் , கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் , திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ள படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.
ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கமல் ஹாசன் அளித்த ஒரு பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்ற அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகவில் பலரும் ‘தக் லைஃப் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமென போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? கன்னடம் குறித்த கமல்ஹாசன் பேச்சால் தற்பொழுது பதற்றம் உருவாகியுள்ளது ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? என கர்நாடக உயர்நீதிமன்றம் கமலஹாசனை சரமாரியாக சாடியுள்ளது.
நீதிபதி நாக பிரசன்னா, “கர்நாடகாவில் இருந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க விரும்புகிறீர்களானால், கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றும் கூறியுள்ளார்
இதற்குப் பதிலளித்த கமல் தரப்பு, அவர் கூறிய கருத்தில் உறுதியாகவே இருப்பதாகவும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தது. அதனுடன், ‘தக் லைஃப்’ படத்தின் கன்னட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் அறிவித்ததுள்ளது
இந்தச் சூழ்நிலையில், கர்நாடக ஃபிலிம் சேம்பர், மாநில அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பிடையே பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆலோசனை வழங்கி, வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “தமிழிலிருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் என்ன ஈகோ? வரலாறு படித்தவர் கமல். அவர் கூறியது தவறு இல்லை. திராவிட மொழிகளில் தமிழ் தாய் மொழி என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழகம் எப்போதும் கன்னடப் படங்களுக்கு இடையூறு இல்லாமல் ஆதரவு அளித்து வந்தது. ஆனால் இன்று, மொழிப் பேச்சுக்கு இந்த அளவிலான எதிர்ப்பு ஏன்?” என கேள்வி எழுப்பினார்.பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம். 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா?” என்று கேள்வி எழுப்பினார்.