ஆமை புகுவதைப் போல பா.ஜ.க. புகுந்த மாநிலம் சிதைந்து போகும் – செல்வப்பெருந்தகை

Selvaperunthagai compares BJP’s entry into states to a tortoise entering and causing destruction, warning of political collapse.


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தியாகி இமானுவேல் சேகரன் சமூக ஒற்றுமைக்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்தவர். ராணுவ வீரராக இருந்த அவர், தமிழ் சமூகம் வேறுபாடின்றி வாழ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பெருமை கொள்கிறது” என்றார்.

மேலும் அவர், “சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதால் நாட்டுக்கு பெருமை இல்லை. அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர். முன்னாள் துணை ஜனாதிபதியின் தரத்தை அவர் கொண்டு வர முடியாது.

நேற்று ராகுல் காந்தி பீகாரில் வாக்குத் திருட்டைப் பற்றி பேசினார். அதுபோல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலிலும் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.

அனைத்துக் கட்சிகளுக்கும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். விஜய்க்கு விதிக்கப்பட்டது போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

உறவாடி கெடுப்பது பாஜகவின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக எங்கு புகுந்தாலும் அந்த மாநிலம் சிதைந்து போகும். மக்கள் உரிமைகளையும், நலன்களையும் கையகப்படுத்தி அம்பானி, அதானி போன்றவர்களிடம் ஒப்படைப்பதே பாஜகவின் வேலை.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காமல் இருந்தவர் எடப்பாடி பழனிசாமியே. அப்போது அதைப் பற்றி எதுவும் செய்யாமல் தேர்தல் சமயம் பேசுவது வெறும் அரசியல் நாடகம் தான்” எனக் குற்றம்சாட்டினார்.