பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல் மறைவு – 10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

"CM Stalin offers ₹10 lakh aid after journalist R.T. Sakthivel’s demise."


நக்கீரன் இதழில் பணிபுரிந்து, “ஆர்.டி.எஸ்” என்ற பெயரில் எழுத்துக்களை வெளியிட்ட பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த அவர், எழுத்தாற்றலாலும் உழைப்பாலும் பத்திரிகை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.

சினிமா செய்திகள், அரசியல் செய்திகள், இலக்கிய விமர்சனங்கள், கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் எழுதி வந்த சக்திவேல், “சினிக்கூத்து” என்ற பெயரில் சினிமா கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இயற்கை எய்தினார்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஆர்.டி. சக்திவேல் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கு பெரிய இழப்பு. அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மறைந்த பத்திரிகையாளர் ஆர்.டி. சக்திவேல் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.