நகை வியாபாரியை தாக்கி 1.5 கிலோ நகை கொள்ளை!

"1.5 kg gold looted after brutal attack on jewelry trader."


மதுரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி விஜயராஜா (வயது 40), காரைக்குடி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் தங்க நகைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சூழலில், சம்பவத்தன்று அவர் 1.5 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மதுரையிலிருந்து அரசு பேருந்தில் காரைக்குடி நோக்கி பயணம் செய்தார். பழைய பேருந்து நிலையத்தில் இறங்கிய விஜயராஜா, அதனைத்தொடர்ந்து கோவிலூர் சாலையில் நடந்து சென்று போது மர்மநபர்கள் ஓர் காரில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் விஜயராஜாவை தடுத்து நிறுத்தி அவரை தாக்கி, அவரிடம் இருந்த தங்க நகைகள் கொண்ட பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. தகவலறிந்த காரைக்குடி போலீஸ் அதிகாரிகள், சமீபத்தில் பொறுப்பேற்ற காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா தலைமையிலான காவல்துறையினர், தேவகோட்டை டி.எஸ்.பி. கவுதம், சிவகங்கை ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர்.

வழிப்பறி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. விஜயராஜா நகையுடன் பயணம் செய்வது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததால்தான் குற்றவாளிகள் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.