போலீஸ் எனக் கூறி ஏமாற்றி வந்த நகைக்கடை உரிமையாளர் கைது!

"Jewelry shop owner arrested for impersonating police and deceiving people"


மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், வண்ணாரப்பேட்டை போலீசார் கண்ணன் ரவுண்டானா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் இருந்து ‘போலீஸ் அசிஸ்டன்ட்’ என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்த விசாரணையில், அந்த அட்டை போலி என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞர்கள், “இது எங்களது முதலாளி வினோத் சோப்டாவின் அடையாள அட்டை” என தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த வினோத் சோப்டா (வயது 48) என்பவர் தான் அதன் உரிமையாளர் என்பது தெரியவந்தது.

வினோத் சோப்டா, நகைக்கடை உரிமையாளர் என்பதும், பல்வேறு இடங்களில் தான் போலீஸ் என கூறி கெத்தாக சுற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.