
3 லட்சம் மக்களை காவு கொள்ளப்போகும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் அரசு அச்சத்தை ஏற்படுத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேரழிவில் மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், மியான்மரில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு, ஜப்பானிலும் மெகா நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்படுவதற்கான 80% சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், ஆனால் இது உடனடியாக ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நான்கை பள்ளத்தாக்கில் நீண்ட காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மெகா நிலநடுக்கம், உண்மையில் ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழப்பர் என அந்நாட்டு அரசு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக, ஜப்பானின் பொருளாதாரம் 1.81 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.