விமர்சனங்களுக்கு சினிமா பிரபலங்களை பயன்படுத்துவது திமுகவுக்கு புதிதல்ல – வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan says DMK has a history of using film celebrities to voice criticisms.


கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 4ஆம் தேதி சென்னைக்கும், 5ஆம் தேதி கோவைக்கும் வருகிறார். அவருக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

வடமாநில பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும், இது முதல் முறை அல்ல என்றும் அவர் குற்றம்சாட்டினார். “இந்திய பாரம்பரியத்திலும் சுதந்திரப் போராட்டத்திலும் வடமாநில பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ளதற்கான காரணத்தை காங்கிரஸிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் பெண்கள் முன்னேற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “தி.மு.க. நடத்திய கல்வி விழா ஒரு நாடகம் போன்றதாக இருந்தது. பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தும் நிலை ஆகியவை நீடிக்கின்றன. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சீர்குலைந்திருக்கிறது. இதையெல்லாம் சாதனையாகச் சொல்ல முடியாது” எனவும் விமர்சித்தார்.

பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் திமுக அரசை புகழ்ந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, வானதி சீனிவாசன், “தங்கள் மீது வரும் விமர்சனங்களுக்கு சினிமா பிரபலங்களை வைத்து பதில் சொல்வது திமுகவிற்கு புதிதல்ல. காலம் காலமாகவே அவர்கள் இதையே செய்து வருகிறார்கள்” எனக் கூறினார்.